தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி.இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கிரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சையில் முடிந்த பிறகு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்பொழுது மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் கிரி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று குணமாகி, வீடு திரும்பிய நிலையில், மீண்டும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட போது தனியார் மருத்துவமனை மருத்துவர் முரளிதரன், சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றும், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் இளைஞர் உயிரிழந்து விட்டார் எனக் கூறி, கிரியின் உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர் முரளிதரன் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை அறிந்த காவல் துறையினரும் அரூர் வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் உயிரிழந்த இளைஞரின் கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தருமபுரி-அரூர் பிரதான சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிப்பால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணாவிடம் கேட்டபோது, தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனால் நேற்று மீண்டும் காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், கிராமத்தில் உள்ளவர்களிடம் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு வந்த போது, ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவர் முரளிதரன் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். நேற்று இரவு இதுபோன்ற புகார்கள் எழுந்தவுடன் மருத்துவரிடம் விசாரணை செய்து, மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளோம். மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது மக்கள் கிராமப் பகுதிகளில் இருப்பவர்களிடம் சிகிச்சைக்கு செல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து பாதிப்பு ஏற்றவாறு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் தெரிவித்தார்.