ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு, ஈ.டிவி, பத்திரிகை நிறுவனர் ராமோஜி ராவ் (88) உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் இன்று காலமானார்.
ராமோஜி குழும நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராமோஜி ராவின் மறைவுக்கு தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜி. கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;-
“ஊடகத்துறையின் முன்னோடியாகவும், தகவல் துறையில் பல சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்களுக்கு முன்னோடியாகவும் இருந்த ராமோஜி ராவ் இன்று மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றியவர் ஆவார்.

ராமோஜி ராவின் மறைவு தெலுங்கு ஊடகத்துறைக்கும், தொலைக்காட்சித் துறைக்கும், தெலுங்கு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ராமோஜி ராவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.