வந்தவாசி அருகே, நடைபெற்ற முயல்விடும் திருவிழா பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இன்று காணும் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சென்று காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர். தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாளும் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். பின்வருமாறு;-

திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த உள்ள புன்னை கிராமத்தில் உள்ள, ஓம்சக்தி கருமாரியம்மனுக்கு காணும் பொங்கலையொட்டி பாரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல் நாளான நேற்று பாரிவேட்டைத் திருவிழாவின் அங்கமான முயல்விடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் எம்.வி. தனபால் தலைமையில் விழாக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.

அப்போது புன்னை மந்தைவெளி மைதானத்தில், நடைபெற்ற விழாவில் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் வந்த கருமாரி அம்மன் முன்பாக, முயலை வைத்து குழந்தைகளை ஆசிர்வதித்தனர். இதன் காரணமாக குழந்தைகளின் சுவாச பிரச்சினைகள் தீரும் என்பது இந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் இருந்த வாகனத்தின் மீதேறி நின்ற விழா குழுவினர் முயலை குழந்தைகளின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.
இதனை தொடர்ந்து இந்த முயல் விடும் திருவிழாவை அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து ரசித்தனர். கருமாரி அம்மன் முன்பாக பிடித்து வந்த முயலை மக்களின் பார்வைக்கு காட்டி அதன்பிறகு முயலை எடுத்து, சுவாமிகளை சுற்றி வந்து இறுதியாக முயலை, ஒரு கரும்பு தோட்டத்தில் தரையில் விட்டனர். அப்போது அந்த முயல் துள்ளி குதித்து தப்பி அருகிலுள்ள வயல்களில் ஓடியது.

இதையொட்டி, இசைக்கலைஞர்கள் இசைக்க, நடைபெற்ற பாரிவேட்டை திருவிழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலர் எம்.பி. வெங்கி டேசன், உள்ளிட்ட ஊராட்சி பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் மருதாடு, அதியனூர், அதியங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.