பாதிக்கப்பட்ட விவசாயினுடைய விளைநிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக – ஜி.கே.வாசன்

2 Min Read
ஜி.கே.வாசன்

தமிழக அரசு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயினுடைய விளைநிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் போதிய மழை இல்லாததால், தாங்கள் பயிர் செய்த நெற்பயிர்கள் கதிர் வரும் தருவாயில் கருகி வீணாகி விட்டதால் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இந்நிலையில் விவசாயத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

குறிப்பாக ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்தவர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை. இவர்களுக்கும் முறையாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஆனால் ஏரி குளங்களை நம்பி விவசாயம் செய்தவர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான இழப்பீட்டையும், பயிர் காப்பீட்டையும் வழங்க ரேண்டமாக கணக்கெடுக்கும் போது நல்ல விளைச்சல் கண்ட புல எண் வருமானால் – பாதிப்படைந்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. அதாவது புல எண்ணைக் கணக்கில் கொண்டாலும், விடுபட்டு போகாமல் பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலத்திற்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

எனவே தமிழக அரசு கிராமங்கள் வாரியாக எந்தந்த விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது என்பதை வட்டார வேளாண் அதிகாரிகளை கொண்டு கணக்கெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி தனி ஒரு விவசாயினுடைய விளைநிலம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான இழப்பீடு அவருக்கு கிடைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்.

எனவே மாநிலத்தில் போதிய மழையில்லாமல் விவசாயத்தால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயிக்கும் இழப்பீடு கிடைத்தால் தான் அவர்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் என்பதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review