Chennai பயிற்சி மருத்துவர்களுக்கு Ganja supply, இளைஞர் கைது !

குற்றவாளி வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை சுற்று வட்டார பகுதியில் , கஞ்சா விற்பனையை 'Part-Time Business பிசினஸ்ஸாக' செய்து வந்துள்ளார் ...

2 Min Read
ரோட்னி ரோட்ரிகோ(25)

அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக 3 பயிற்சி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை தொடர்ந்து சப்ளை செய்து வந்த 25 வயதான பட்டதாரி இளைஞரை போலீசார் நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

- Advertisement -
Ad imageAd image

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி உள்ள பயிற்சி மருத்துவர்கள் சிலர் கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜனுக்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது .

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவர் விடுதியில்,  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் திடீர் சோதனை மேற்கொண்டார்.

சோதனையின் போது பயிற்சி மருத்துவர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேர் கஞ்சா , கேட்டமைன் உட்பட்ட போதை பொருட்களை உபயோகிப்பது தெரிய வந்தது . உடனடியாக அவர் இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் .

தகவலின் பேரில் விடுதிக்கு வந்து சோதனை செய்த காவல் துறை அதிகாரிகள் அந்த பயிற்சி மருத்துவர்கள் அறையிலிருந்து 149 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணிக்காக மருத்துவ துறையில் பயன்படுத்தும் 4 கேட்டமைன் மருந்து குப்பிகளைக் கைப்பற்றினர். அவர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் , அவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ரோட்னி ரோட்ரிகோ(25) என்பவரையும் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் , பிபிஏ பட்டப்படிப்பை முடித்துள்ள ரோட்னி தனியார் டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் , சம்பள பற்றாக்குறை காரணமாக நண்பர்கள் உதவியுடன் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை சுற்று வட்டார பகுதியில் , கஞ்சா விற்பனையை ‘பார்ட் டைம் பிசினஸ்ஸாக’ செய்து வந்ததையும் போலீசாரிடம் ஒப்பு கொண்டார் .

மேலும் கைது செய்யப்பட்ட ரோட்னியிடமிருந்து 1.2 கிலோ கிரீன்ஸ் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளி ரோட்னியை சிறையில் அடைத்தனர் . மேலும் ரோட்னிக்கு கஞ்சா சப்ளை செய்ய உதவும் நபர்களை கைது செய்யவும் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

அரசு மருத்துவ கல்லூரி விடுதி வளாகத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review