சேலம் பெண்கள் சிறையில் முதன்முதலாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற கைதிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சேலம் மத்திய சிறையில் கைதான 13 பேர், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வை எழுதியிருந்தனர்.
அதில் 10 பேர் தேர்ச்சி பெற்றனர். கனிவளவன் என்ற தண்டனை கைதி 451 மதிப்பெண்ணும், சுரேஷ் என்ற விசாரணை கைதி 430 மதிப்பெண்ணும், செக் மோசடி வழக்கில் கைதாகி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமுதவள்ளி 426 மதிப்பெண்ணும் பெற்றனர்.

சேலம் பெண்கள் சிறையை பொறுத்தவரை, அடிப்படை கல்வி மற்றும் ஆம் வகுப்பு தேர்வை மட்டுமே, கைதிகள் இதுவரை எழுதியுள்ளனர். முதன்முதலாக, அமுதவள்ளி பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு எழுதிய இவர், அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. இவ்வாறு பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை எழுதலாம்.

அதன் பிறகு, தோல்வி அடைந்த பாடத்தை படித்து, மீண்டும் தேர்வை எழுதலாம். அதன்படி, பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த அமுதவள்ளி, சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வையும், அதை தொடர்ந்து பிளஸ் 1 தேர்வையும் எழுதினார்.
அதில் பிளஸ் 2 தேர்வில் 331 மதிப்பெண் பெற்றார். அதேபோல், நேற்று வெளியான பிளஸ் 1 தேர்வில், 426 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், கைதிகள் அனைவருக்கும் பேனா பரிசளித்தார்.