சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 31). சொந்தமாக ஆட்டோ, கார் ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி ஜனகவள்ளி(வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியான ஜனகவள்ளிை 2-வது பிரசவத்துக்காக நேற்று முன்தினம் புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மகப்பேறு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி கனகவள்ளி உயிரிழந்தார்.
அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், புளியந்தோப்பு மகப்பேறு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவர்கள் இல்லாததுதான் ஜனகவள்ளி மற்றும் அவரது குழந்தை சாவுக்குக் காரணம் என்று கூறி எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் கனகவள்ளியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் அழகேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்தும்படி மருத்துவ கல்வி இயக்குநருக்குத் துணை ஆணையர் பரிந்துரை கடிதம் கொடுத்தார். அதை ஏற்றுச் சாலை மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.