ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் , ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்களாகத்தான் இருப்பார்களா ’ என தனது பிரச்சாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் நரேந்திர மோடியை தான் மறைமுகமாகத் தாக்கி பேசியதாகவும் மேலும் ராகுலின் இந்த பேச்சு ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தயும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று பாஜக கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில் , பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆண்டில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நிலையில் , கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உட்பால் குமார் சிங் தெரிவித்திருந்தார் .

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் , தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகையானது என்று தெரிவித்துள்ளார் . நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் “ராகுல் காந்தி விஷயத்தில் நான் கருத்து சொல்வதற்கு சட்ட நிபுணர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூற வேண்டும் என்றால், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பெரிய மனது காட்டியிருக்க வேண்டும்.
சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற அடல்பிகாரி வாஜ்பாயியின் பிரபலமான வரியை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று சுட்டிக்காட்டிய பிரசாந்த் பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கட்சியினர் மேல் முறையீடு செல்லும் வரைக்கும் சில நாட்கள் பொறுத்திருந்து தகுதி இழப்பு முடிவை அமல்படுத்தியிருக்க வேண்டும். என்று அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார் .