சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் ஒன்றிய அரசின் போக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-
நீட் தேர்வில் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நடந்த முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்தது.

தற்போது தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதை ஒன்றிய அரசு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தலைவராக உள்ள சுபோத்குமாரை திடீரென ஒன்றிய அரசு நீக்கியது. நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மெய்ப்பிப்பதாக உள்ளது.
ஒன்றிய அரசின் குழப்பங்களின் தொடர்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தள்ளி வைத்துள்ளது.

நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த இத்தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இந்த நிலையில் சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் ஒன்றிய அரசின் போக்கு உள்ளது.
இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது என்று நாம் அறிவுறுத்தி வரும் நிலையில்,

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது.