கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 75 லட்சம் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியது மட்டுமல்லாமல், இருவரையும் விடுவித்து 2016-ம் ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இதனை அடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2016-ம் ஆண்டு மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் 2023 டிசம்பர் 19 அன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மனைவி பெயரில் தவறான சொத்து சேர்த்தது நிரூபணமாகிறது என தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், வருமான வரி ஆவணங்கள் நிரூபிக்கவில்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், அவ்வாறு விடுதலை செய்தால் அது தவறான முன்னு தாரணமாகிவிடும் எனவும், ஆகையால் விழுப்புரம் நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.

மேலும், கீழமை நீதிமன்றம் வங்கிக் கணக்கு ஆவணங்களை முழுமையாக பார்க்க தவறிவிட்டது என சுட்டிக் காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், 64 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனால், பொன்முடி வழக்கு விசாரணைக்கு உகந்தது தான், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தார்.

இதன்படி, 2023 டிசம்பர் 21-ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரடியாகவோ அல்லது காணொலிக் காட்சி மூலமாகவோ நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அப்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த நிலையில், 2023 டிசம்பர் 21-ம் தேதி நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, இந்த வழக்கின் தண்டனை விவரங்களை நீதிபதி ஜெயச்சந்திரன் வாசிக்க தொடங்கும் முன்பாக, அமைச்சர் பொன்முடி கருத்தை தெரிவிக்க உயர் நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது.
அதனை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. அப்போது, அமைச்சரின் மருத்துவ ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தண்டனைக்கு முன் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதியிடம் அமைச்சர் பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் ஜனவரி 22-ம் தேதிக்குள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், இல்லை என்றால் கிழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
பொன்முடிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர், தண்டனையை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகிய இருவருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை பெற சட்டமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.