கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி பயின்று வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிருதுளாவுக்கு திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிருதுளா அப்துல் ரகுமானுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.
காதலி பேசாததால் மன வேதனை அடைந்த அப்துல் ரகுமான் கடந்த பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கு தானே காரணம் என நினைத்து கடந்த சில நாட்களாகவே இளம் பெண் மிருதுளா மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த அவர் தனது தாய் தந்தை ஆகியோர் வெளியே சென்று விட்ட நிலையில் வீட்டிலிருந்த தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு அவர் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை கண்ட அவரது பாட்டி அலறி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோலார் பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலன் உயிரிழந்ததை தாங்காமல் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.