ஆந்திரா மாநிலத்திருந்து சாமி கும்பிட வந்த பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் லேப்டாப்பை திருடிய பலே திருடன் கைது .
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசிவமுரளி மற்றும் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த பிரிதிவிராஜ் , ஆகிய இருவரும் , தனித்தனியே இருவேறு கார்களில் தங்களது குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
இவர்கள் சிவ சன்னதி ஆசிரமம் அருகே தங்களது கார்களை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் , இரண்டு கார் கண்ணாடிகளையும் உடைத்து அதிலிருந்து விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார் . காரின் உரிமையாளர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த பார்த்த போது காரின் கண்ணாடிகள் உடைந்திருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக அவர்கள் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணையை தொடங்கினர்.
அப்பொழுது அதில் லேப்டாப் மற்றும் செல்போனை திருடியது கீழானத்தூர் பெருமாள் நகரை சேர்ந்த வெங்கடேசன் வயது 34 என்பது தெரிய வந்தது.
மேலும் வெங்கடேசன் இதுபோன்று பல திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு படை போலீஸ் அமைத்து அவரை உடனடியாக கைதுசெய்தனர் .
வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் கோமளவல்லி தலைமையிலான போலீசாரை திருவண்ணாமலை போலீஸ் சூப்பரண்ட் கார்த்திகேயன் பாராட்டினார் .