மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து இரு வேறு பார்களில் மாமூல் கேட்டு பார் ஊழியர்களை பீர் பாட்டிலால் வெட்டி பாரில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடிகள் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மீஞ்சூர் அருகே பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் அடையாளம் தெரியாத ஐந்து மர்ம நபர்கள் வந்து மது அருந்தியதாகவும், பின்னர் இலவசமாக மது கேட்டும் மாதம் மாமுல் தர வேண்டும் என கேட்டனர்.
இதற்கு பாரில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர் பணம் தர மறுத்ததால் அவரை பீர் பாட்டிலால் அடித்தனர். பின்னர் அரிவாளால் வெட்டியும் பாரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

அப்போது உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று மீஞ்சூர் அடுத்த கொக்கு மேடு பகுதியில் பாரில் மாமூல் கேட்டு தகராறு ஈடுபட்டனர்.
அப்போது பாரில் பணிபுரிந்த ஜெயின் என்பவரை வெட்டியும் பாரிலிருந்து 20 பாட்டில்களையும் ₹10,000 கொள்ளையடித்தவர்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து மாமூல் கேட்டு ரவுடிகள் ஈடுபடும் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.