பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் சி.வி. சண்முகம் சந்திப்பு..!

3 Min Read

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது.

- Advertisement -
Ad imageAd image

மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளையும் மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் பா.ம.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நேற்று இரவு 7.45 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற சி.வி. சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக இந்த சந்திப்பின்போது டாக்டர் ராமதாசிடம். சி.வி. சண்முகம் கூறி இருப்பதாக தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.2- ம் கட்ட தலைவர்கள் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தங்களது கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்ப்பதற்கு திரைமறைவிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாசை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை சேர்ப்பதற்கு நேரடியாக நடத்தப்பட்டிருக்கும் முதல் பேச்சுவார்த்தை இது என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது என்னென்ன விவரங்கள் பேசப்பட்டன? என்பது பற்றி இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி தொடர்பாகவே பேச்சுவார்த்தை
நடைபெற்றிருப்பதாக 2 கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்து உள்ளன.

டாக்டர் ராமதாசுடனான இந்த பேச்சுவார்த்தைக்கு சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமியே அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சி.வி. சண்முகம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமதாஸ் சி.வி. சண்முகம் சந்திப்பு

மேலும், பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற வேண்டுமென்றால் பா.ம.க.வுக்கு 12 தொகுதிகள் வரையில் தர வேண்டும் என்று அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ 7 இடங்களை தருவதாக கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் பா.ம.க.வுக்கு பாரதிய ஜனதா தருவதாக உறுதி அளித்திருக்கும் 7 தொகுதிகளைவிட கூடுதலாக 2 தொகுதிகளை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் பா.ம.க.வை தங்களது அணியில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தி.மு.க. அணியை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதே அ.தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது. கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியிலேயே இடம் பெற்றிருந்தது. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க.வை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலன் கிடைக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share This Article
Leave a review