பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது வழக்கு..!

2 Min Read
தற்கொலை செய்து கொண்ட மாணவி சுனிதா

பிளஸ்-2 மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர் மற்றும் 7 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் அருகே ஒருகோடி கிராம பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நேதாஜி – மதினா தம்பதியர். இவர்களது மகள் சுனிதா (வயது 17). இவர் விழுப்புரத்தில் உள்ள இராம கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந் தேதி பள்ளியில் அரையாண்டு தேர்வு தமிழ் பாடத்தேர்வு நடந்தது. இத்தேர்வை மாணவி சுனிதா சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி அவரது தந்தை நேதாஜிக்கு பள்ளியில் இருந்து போன் செய்து அவரை பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதன்படி மறுநாள் நேதாஜி தனது மகள் சுனிதாவுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இராம கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி

அங்கு அவரிடம் ஆசிரியர்கள் சிலர், உங்களது மகள் சரியாக படிப்பதில்லை, உங்கள் மகளால் எங்களுக்கு தேர்ச்சி சதவீதத்தை சரியாக காட்ட முடியாது, இனி உங்கள் மகளுக்கு இப்பள்ளியில் படிக்க இடம் கிடையாது, பள்ளி மாற்று சான்றிதழை வாங்கிவிட்டு செல்லுங்கள் என்று திட்டியுள்ளனர். பள்ளி கேட்டுக்கு வெளியில் வந்தவுடன் தந்தை நேதாஜி ”இப்படி தவறு செய்து அசிங்கப்படுத்திட்டியே” என்று கோபப்பட்டு மகள் சுனிதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். கண்கலங்கியபடி பெற்றோர்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவி சுனிதா இரவு சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் மௌனமாக இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி சுனிதா, நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது வீட்டில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இராம கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் போலிசார் குவிப்பு

இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நேதாஜி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 5 பெண் ஆசிரியைகள், 2 ஆண் ஆசிரியர்கள் என 8 பேர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share This Article
Leave a review