கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணை கண்டித்ததால் நண்பனுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது. கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அருகே உள்ள ஆல்பேட்டை கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன் வயது (50).
இவர் சிதம்பரத்தில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி மோகன் தனது குடும்பத்தினருடன் நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் நபர் மோகனை தொடர்பு கொண்டு அவரது வீட்டின் வெளியே தீப்பிடித்து எரிவதாக கூறினார்.

இதனால் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்த மோகன் பார்த்த போது, வீட்டின் கதவு வெளியே இருந்த ஸ்கிரீன் எரிந்து கொண்டிருந்தது. இதன் பின்னர் வெளியே வந்து பார்த்த போது அங்கு கண்ணாடி பாட்டில் துண்டுகள் சிதறி இருந்தன. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் மோகன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றது தெரியவந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்தது.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. மேலும் அந்தப் பகுதியில் பதிவு ஆகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை ஆல் பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் விசாரணையில், 2 சிறுவர்களில் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாகவும், அந்த சிறுமியின் குடும்பத்தாரும், மோகனின் குடும்பத்தாரும் குடும்ப நண்பர்கள் என்பதால், மோகன் குடும்பத்தினர் அந்த சிறுமியை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது காதலனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் ஆற்று திருவிழா முடிந்து இரவு தனது நண்பனுடன் சேர்ந்து மோகனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதனை அடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.