வானூர் அருகே வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானூர் அடுத்த பட்டானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் வயது 26. வக்கீல் அவரது தரணி வயது 26. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது தரணி கர்ப்பமாக உள்ளார். நேற்று காலை 6 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென ஜேம்ஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். அந்தப் பெட்ரோல் குண்டு வீட்டின் சுவரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

சத்தம் கேட்ட ஜேம்ஸ் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வானூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பெட்ரோல் குண்டு சிதறல்களை சேகரித்தனர். இது குறித்து ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஜேம்ஸுக்கும் ஒரு சிலருக்கும் முன் விரோதம் இருப்பதாகவும் அதன் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

இதனை அடுத்து மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். புதுவை அருகே வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.