திருச்சியில் இன்று நடக்கும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாநாடு ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்கிற எதிர்பார்ப்பு அவர்களுடைய ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு யார் ஆதரவு கிடைத்தால் என்ன? எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிவிட்டார், இனி அவரை தொடர்ந்து தான் கட்சி இயங்கப் போகிறது என்கிற எண்ணத்தில் இருந்த வருகிறார்கள்.
ஆனாலும் ஓ பன்னீர்செல்வத்தை நம்பி அவரோடு வந்தவர்கள் என்ன ஆகப் போகிறோம் என்கிற குழப்பத்தில் தான் இந்த திருச்சி மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி இடம் தான் பொதுச்செயலாளர் பதவி இருக்க வேண்டும், கட்சியும் அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும், என்பதில் உறுதியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டது.
இதன் பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் ஆலோசனையை பெற்று வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தில் தான் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி காட்டி பிஜேபி கட்சியினருக்கு தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடிவெடுத்திருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இதன் முடிவு பிஜேபியுடன் தானும் தன் ஆதரவாளர்களையும் இணைத்துக் கொள்வதாக கூட இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக இருந்த அதிமுக ஓபிஎஸ்ஸின் துணை முதல்வர் பதவியோடு ஒன்றானது. அதிலும் கூட தினகரன், சசிகலா போன்றவர்கள் தனித்தே செயல்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் பாஜக ஒன்றுபட்ட அதிமுகவை தான் விரும்புகிறது. அப்படி இல்லாத நேரத்தில் அதிமுகவில் இருந்து விலகி நிற்பவர்களை பாஜகவில் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறது.
ஒருவேளை அதிமுக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் அதிமுகவின் ஆதரவாளர்களை கொண்டு தேர்தலை சந்திக்கும் திட்டமும் பாஜகவிடம் இருக்கிறது.
ஒருவேளை சசிகலா, தினகரன், ஓ பன்னீர்செல்வம் கூட்டணி அமையும் பட்சத்தில் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். இவர்களை ஒருங்கிணைக்க பாஜக எவ்வளவு முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு பக்கம் எடப்பாடி- அண்ணாமலை பனிப்போர் நீடித்து வருகிறது. இது ஒரு வகையில் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்று அமித்ஷா போன்ற மூத்த தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
திருச்சியில் இன்று ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் தனது ஆதரவாளர்கள் மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு என்ன சொல்ல போகிறார்? என்பதைத்தான் எதிர்நோக்கி இருக்கிறது அதிமுக அரசியல்.
இதே மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மாநாடு நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் எதிர்பார்த்து இரட்டை இலை சின்னத்தை பெறப்போகிறதா இல்லை தொண்டர்கள் பலத்தை நிரூபித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.