நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கக் கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறினார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ளடக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தைலை ராஜேந்திரன் வரவேற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.எஸ் வெங்கடேசன் மாநில நிர்வாகிகள் விடியல் சேகர், வி.ஆர்.பி சோழன் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஞானச்சந்திரன், அதையூர் பாண்டியன், நகரத் தலைவர் ஹரி பாபு, சதீஷ்குமார், முத்து, பரந்தாமன், பழனி, கிருஷ்ணராஜ், செம்மலை, குணசேகரன், ராமானுஜம், தயாளன், பாஸ்கர், புண்டியாங்குப்பம் சாம்பசிவம், கள்ளக்குறிச்சி காளிதாஸ், குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் தா.மா.க தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஆட்சியாளருக்கும், கவர்னருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது, மக்கள் நலன் காக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனத்திற்கு ஏற்றவாறு கவர்னர்களுக்கு சில வரையறைகள் இருக்கிறது, எனவே ஆட்சியாளர் கவர்னர் சட்டப்படி இணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு மாநிலத்தின் வளர்ச்சியை செயல்படுத்த வேண்டும். அமலாக்கத்துறையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்பதில் மாற்று கருத்து கிடையாது. அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி மத்திய, மாநில அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, மக்களுக்காக நேர்மையாக செயல்படுவது அவசியம். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்களது பணியில் அங்கீகாரம் பெற வேண்டுமே தவிர தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 4ஆம் தேதி இன்று தொடங்குகிறது. இதில் 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. உறுப்பினர்கள் தங்களது சந்தேகங்களுக்கு கேள்வி எழுப்பி விவாதத்தில் பங்கு எடுத்து தீர்த்துக் கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தவறான யுகத்தை அமைத்து நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கக் கூடாது.

அது தவறான செயல்பாடு ஆகும். எதிர்கட்சிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும். 4 மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது காங்கிரஸ் ஆட்சி புரிந்த இரண்டு பெரிய மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. அப்படியென்றால் மத்திய பாரதிய ஜனதா ஆட்சிக்கு செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபித்து இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதாவும், தமிழகத்தில் அதிமுகவும் தான் பெரிய கட்சி என்பதை நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். தெலுங்கானாவில் ஆளுங்கட்சி தோல்வியுற்றதற்கு குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சியின் தவறான செயல்பாடு அடுத்த கட்சியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. அதிமுக, பாரதிய ஜனதாவுடன் நாங்கள் நட்பு கட்சியாகவே இருக்கிறோம். தேர்தலின் போது தா.மா.கா.வின் உயர்மட்ட கூட்டம் நடத்தி அதில் கூட்டணி முடிவே அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.