வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இம்முறை புதுமுகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்” என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
டில்லியில் அவர் கூறியதாவது: தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசியலில் ஒரு சக்தியாக உருவெடுத்து இருந்தார். மக்கள் செல்வாக்கு இருந்தும் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பது சோகமானது; திரைத்துறைக்கும் பெரு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என ஏற்கனவே காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியிருக்கிறார். செய்ய வேண்டியது தான். விஜயகாந்த் குறித்த நினைவை போற்றிப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமை. லோக்சபா தேர்தல் குறித்து கலந்து பேசுவதற்காக காங்கிரஸில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க.விடம் எவ்வளவு தொகுதிகள் கேட்பது என்பது குறித்து முகுல் வாஷ்னிக் தலைமையிலான அந்தக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்.கிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இம்முறை புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை ௨ம் கட்டம் என்பது தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுவது அல்ல. காந்தியின் தண்டி யாத்திரை எப்படி இந்திய மக்களின் ஒற்றுமை மற்றும் வளத்தை மையமாக வைத்து நடந்ததோ அதுபோலவே ராகுலின் யாத்திரையும் இருக்கும்.

நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என ராகுல் நினைக்கிறார். அதை வலியுறுத்தியே அவர் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். மக்களிடையே மதம் மற்றும் ஜாதி வெறுப்புகளை துறக்க வேண்டும் என்பதே அவரின் தாரக மந்திரம். தன்னுடைய யாத்திரையின் போது அதையே அவர் பரப்புரையாக மேற்கொள்வார். இவ்வாறு அழகிரி கூறினார்.