ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவன இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி தனது கணவர் ரவிச்சந்திரன் பெயரில் ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி, ஹிஜாவு நிறுவனத்துக்காக முதலீடுகளை ஈர்த்ததாக கடந்த ஏப்ரல் முதல் வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
தற்போது இரண்டாவது முறையாக கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது .
அப்போது காவல் துறை தரப்பில் எறத்தாழ 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக, 16 ஆயிரத்து 500 பேரிடமிருந்து இதுவரை புகார்கள் வந்துள்ளது. இதுவரை 40 பேர் மீது குற்றம்சாட்டபட்டுள்ளது.
மேலும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிச் செல்லவும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளது. மீட்கப்பட வேண்டிய தொகை அதிகம் என்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் .