சாதிவாரி கணக்கெடுப்புக்கு ’ஓகே’.! தடையை நீக்கிய பாட்னா நீதி மன்றம்.!

0
43
பீகார் அரசு

பாட்னா: பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனால் அந்த கணக்கெடுப்பு பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது. பீகாரில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பணி நடந்து முடிந்தது. இந்த பணி ஜனவரி மாதம் 7 ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை நடந்தது. மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்ற வகையில் இந்த பணி தொடங்கப்பட்டது.

அரசு அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு 2வது கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 2ம் கட்ட பணிகளும் துவங்கியது. சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்டுவந்தன. இந்த நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தி வருவதற்கு எதிராக பாட்னாவில் உள்ள அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2ம் கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பணி முடிவடைய 11 நாட்கள் இருந்த நிலையில் இந்த தடை விழுந்தது. இதற்கிடையே தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேவி சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதோடு மாநில அரசு தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதன் மூலம் மீண்டும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here