பாப்பாநாட்டில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வாயில் துணியை கட்டிக்கொண்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய் கூலி தொழிலாளி.

விடுமுறைக்காக இளம்பெண் ஊருக்கு வந்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்த போது, தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன்(25) இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார்.
அந்த பெண் வர மறுத்துள்ளார். இதனால், இளம்பெண்ணை வலுகட்டாயமாக, ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20,) 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர்.

பின்னர் நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை அவர்களது செல்போனில் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில், கவிதாசன் அவர்கள் நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் முழு கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சிவாஜி தலைமையில் பாப்பாநாடு கடைத்தெரு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது .

இதில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர் . இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தங்களுக்கே ஒலிபெருக்கி பயன்படுத்த தடை செய்திருப்பது சற்று வருத்தமாகவே உள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் சற்று மனவருத்தத்துடன் தெரிவித்தனர் .
நேற்று மாலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன் முன்னாள் மண்டல செயலாளரும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் மற்றும் தஞ்சை மைய மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன்,பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.