பல்லடம் அருகே பிரபல ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கை துண்டித்த நிலையில் வெட்டி கொலை…. 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரியான் புதூர் பகுதியில் முகம் சிதைக்கப்பட்டு கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தடையவியல் நிபுணர்கள் கொலை செய்யப்பட்ட நபருடைய ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் வினோத் கண்ணன் என்பதும் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியை சேர்ந்த இவரின் மேல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தற்பொழுது தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் “பல்லடம் அடுத்த கரையாம்புதூர் என்ற இடத்தில் வைத்து, காலை 8 மணியளவில் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியை சேர்ந்தவரும் பிரபல ரவுடியுமான வினோத் கண்ணன் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கொலை செய்திருக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன் மீது கொலை, ஆள் கடத்தல் என பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “என்று தெரிவித்தார்
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்க இருந்த நிலையில், இந்த கொடூர கொலை சம்பவம் ஆனது பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
மேலும் 5 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து வினோத் கண்ணனை சாரமாதியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் மூன்று தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்லடம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.