விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா என்ற சிவசண்முகத்தை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் விக்கிர வாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூர், ஒரத்தூர், தொறவி ஆகிய கிராமங்களில் பரபரப்பு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது நேமூர் கிராமத்தில் திருமாவளவன் கூற்உகையில்;- முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் இருந்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் அரவணைத்தது போல் விசிகவை அரவணைத்தார்.

காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டம் கூடிய போது திமுகவுடன் கைகோர்த்தோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும். தலித் மக்களின் ஓட்டுகளை இனி பணம் கொடுத்து வாங்க முடியாது.
சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற திமுகவினர் எப்படி உழைத்தார்களோ அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

சபாநாயகர் ஓம் பிர்லா நான் பேசும் போது மைக்கை ஆப் செய்து விட்டார். அதை தொடர்ந்து அவரை சந்தித்த போது இருவரும் விசிக என அங்கீகாரம் கொடுத்தார். தமிழ்நாட்டில் மட்டும் தான் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று 100% வெற்றி பெற்றுள்ளோம்.
திமுகவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நல்லிணக்கமான உறவு நீடிக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் நமது வாக்கு ஒரு வாக்குகள் கூட சிதறக் கூடாது.

அன்னியூர் சிவா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு தான் காரணம் என ஊடகங்களும், நாட்டு மக்களும் சொல்ல வேண்டும் என்றார்.