தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும்.தெற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என்றும், 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், பிரதான சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.போரூர்,அய்யப்பந்தாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சூளைமேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொளத்தூர். அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. இதே போல, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழையால் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கருமேகங்கள் கனமழையை கொட்டியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையம் பகுதியில் பெய்த மழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியது. ஆழம் தெரியாமல் பயணித்த சிலரின் வாகனங்கள் பழுதாகி நின்றதால் அவதியடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் பகலில் தூறல் மழையும், இரவில் கனமழையும் பெய்தது. நீடூர், குத்தாலம், கோமல், மங்கைநல்லூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மின்னல் தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். கந்தாடு கிராமத்தில் கனமழை பெய்த போது விவசாய நிலத்தின் கூரைக் கொட்டகையின் மீது மின்னல் தாக்கியதால், அதற்குள் அமர்ந்திருந்த 5 பேர் மயக்கமடைந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி, திருமலை சமுத்திரம், திருக்கானூர் பட்டி, ஒரத்தநாடு, மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சம்பா சாகுபடி நடவு பணிகள் முடிந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயில் வாட்டி வதைதாலும், மாலையில் பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. தூத்துக்குடி, மயிலாடுதுறை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் 28ஆம் தேதிக்கு முன்பாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் டிசம்பர் ஒன்று வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
சூப்பர்