நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர். மேலும், அரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தேர்வுக்கு முன்பாகவே பீகாரின் பாட்னா மற்றும் குஜராத்தின் கோத்ரா பகுதிகளில் நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பாட்னாவில் 13 பேரை பீகார் போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில்,
அதில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில், முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்த ஒன்றிய அரசு, சில இடங்களில் தனிப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக பின்னர் ஒப்புக் கொண்டது.
ஆனாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்த ஒன்றிய கல்வி அமைச்சகம், நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) மேம்படுத்த 7 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

இறுதியில், கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், ரேங்க் பட்டியலில் மோசடி என அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நீட் விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. நீட் முறைகேடுகள் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி 120பி (குற்றச்சதி), 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சிபிஐ சிறப்பு தனிப்படையினர் பாட்னா மற்றும் கோத்ராவிற்கு அனுப்பப்பட்டனர். ஏற்கனவே, சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நீட் முறைகேடுகள் குறித்தும் விசாரணையை தொடங்கி உள்ளது.
நீட் முறைகேடு, நெட் தேர்வு ரத்து ஆகியவற்றை தொடர்ந்து நீட் முதுகலை நுழைவுத்தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்ததா என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள 7 நபர் உயர் மட்டக்குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.