தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் பரிசு வென்று சாதித்துள்ளனர். இந்திய மனித வள மேம்பாட்டு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் அமைச்சகத்தின் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. இணைந்து ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 என்ற பெயரில் தேசிய அளவிலான போட்டியை அண்மையில் நடத்தியது.

இந்த அகில இந்திய அளவில் சிக்கல் தீர்க்கும் இந்த திட்ட வரைவு மென்பொருள் போட்டியில் முதல் சுற்றில் நாட்டின் பல்வேறு பல்கலை மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு பெற்றனர்.
இந்த கல்லுாரியின் குழு “குறைந்த விலை மயோ மின்சார அடிப்படையிலான செயற்கை கை” என்ற புதிய தயாரிப்பிற்கு இப்பரிசு கிடைத்து. கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் வள்ளி மற்றும் இந்த கல்லுாரியில் இயங்கி வரும் ‘இக்நைட் ஸ்கை லேப் நிறுவனர் மனோஜ்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் மாணவர்கள் முதல் பரிசு பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தற்போது சாதித்த மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை 2 ஆம் ஆண்டு மாணவ, மாணவிகள் கார்த்திக், அன்பரசன், யுவன்சங்கர், சத்தியா, அரவிந்தராஜா மற்றும் பவதாரிணி ஆகியோரை, கல்லூரி தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.
தேசிய அளவிலான ஹோக்கத்தான் போட்டியில் SIH என்பது, அரசாங்கம், அமைச்சகங்கள், துறைகள், தொழில்துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் அழுத்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவின் நாடு தழுவிய முயற்சியாகும். இந்த கல்லுாரி, இதே தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.