திண்டிவனம் அருகே ஏரியில் கொலை செய்து ஆண் சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த திண்டிவனம் அருகே ஓங்கூர் அருகே திண்டிவனம் – சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள பாதிரி, மதுரா ஊராட்சிக்கு உட்பட்ட கரிக்கம்பட்டி ஏரிக்கரையில் எரிந்து கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

அதனை பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது எஸ்.பி தீபக் சிவாக், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் (பொறுப்பு) ஆகியோரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தை பார்வையிட்டனர்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதை அடுத்து சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் கல்பனா, சரவணன் மற்றும் வட்டார தடய அறிவியல் நிபுணர் ராஜி ஆகியோரின் மூலம் அந்த பகுதியில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
தடயவியல் நிபுணர்களிடம் சடலத்தின் நிலை மற்றும் இறப்பு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என எஸ்.பி கேட்டறிந்தார்.

அப்போது சடலத்தின் அருகில் பீர் பாட்டில்கள் கிடப்பதால் யாரேனும் மது அருந்தி விட்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது கழுத்தை அறுத்து கத்தியால் குத்தி கொலை செய்து, பின்னர் எரித்திருக்கலாமா? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணையை துவங்கி உள்ளனர்.
இதற்கிடையே மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் போலீசார் சோதனை செய்த போது அது அந்த இடத்தில் மோப்பமிட்டு சென்னை மார்க்கமாக ஓடிச்சென்று நின்றது.

அதன்படி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது ஏரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.