முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா – பக்தர்களுக்கு சுடச் சுட பிரியாணி..!

2 Min Read

மதுரை மாவட்டம், அடுத்த திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், 200-க்கும் மேற்பட்ட சேவல்கள், 3000 கிலோ அரிசி கொண்டு பிரியாணி செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

மதுரை மாவட்டம், அடுத்த திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் இருவேறு சமூகத்தினர் வெகு விமர்சையாக பிரியாணி திருவிழா நடத்துவது வழக்கம். அப்படி 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த ஆண்டு பிரியாணி திருவிழாவிற்காக பக்தர்கள் கடந்த ஒருவாரமாக காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர்.

100 ஆடுகள்.. 200 சேவல்கள்.. 3000 கிலோ பிரியாணி

இதனை அடுத்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை ஊர்வலமாக பால்குடம் சுமந்து வந்து, அந்தப் பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
அதேபோல் பெண் பக்தர்கள் தேங்காய், பழம், பூந்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலை மாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜையுடன் சாமி தரிசனம் செய்தனர்.

100 ஆடுகள்.. 200 சேவல்கள்.. 3000 கிலோ பிரியாணி.. முனியாண்டி கோயிலில் நடந்த பிரியாணி திருவிழா

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சேவல்களை முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டனர்.

பக்தர்களுக்கு சுடச் சுட பிரியாணி

அதனை தொடர்ந்து 3000 கிலோ பிரியாணி அரிசியில் அண்டா அண்டாவாக அதிகாலை முதலே பிரியாணி தயார் செய்தனர். இதனை அடுத்து சனிக்கிழமையான இன்று காலை பிரியாணி கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச் சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஸ்ரீ முனியாண்டி கோவில் திருவிழாவை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

Share This Article
Leave a review