ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர் பிரஜேஷ் குமார் குட்டியா வயது (51). இவர் ஈஞ்சம்பாக்கம் ஹாலியூவ் பீச் பகுதியில் சொகுசு பங்களா வாடகைக்கு எடுத்து வெளிநாட்டிற்கு ஃப்ளவர் பொக்கே ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது வீட்டு வளாகத்தில் கார் பார்க்கிங் பகுதியில் கொல்கத்தாவை சேர்ந்த கவுதம் வயது (45) என்பவர் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பிரஜேஷ் குமார் குட்டியா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை காவலாளி கவுதம், மின்விளக்குகளை அணைத்து விட்டு வீட்டை சுற்றி பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதை அடுத்து கவுதம், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், வீட்டின் உரிமையாளர் பிரஜேஷ் குமார் குட்டியாவுக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன்படி நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் முதற்கட்ட விசாரணையில், சொகுசு பங்களா வீட்டின் பின்புறம் இருள் சூழ்ந்த காலி இடம் உள்ளது. இந்த வழியாக கொள்ளையர்கள் வந்து நோட்டமிட்டு வீட்டில் உரிமையாளர் இல்லாததை தெரிந்து கொண்டு பின்பக்கம் கயிறு போட்டு மேலே ஏறி வீட்டுக்குள் நுழைந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டின் கதவு, பீரோவில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். அப்போது மோப்பநாய் ஜானி வரவைக்கப்பட்டு வீட்டின் பின்புற சுற்றுச்சுவர் வரை ஓடி நின்றது. பிரஜேஷ் குமார் குட்டியா வெளிநாட்டில் இருந்து வந்தால் தான் எவ்வளவு பணம், நகை கொள்ளை போனது என்பது தெரியவரும். தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் வசிக்கும் இப்பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.