கூவாகம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருநங்கைகளும் கூத்தாண்டவர் கோயில் தான். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழு குக்கிராமங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அவதி படுவதாக புலம்புகின்றனர் கிராம மக்கள்.
கூவாகம் கிராமத்திற்கு உட்பட்ட அண்ணா நகர், சிவிலியங்குளம், பாரதி நகர், கூ.தொட்டி, நத்தம், கூவாகம், கூவாகம் ஆதிதிராவிடர் குடியிருப்பு என்ன உள்ளடக்கியது கூவாகம் ஊராட்சி சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்டது இந்த ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒரு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 20 நாட்களுக்கு மேல் வெகு விமர்சையாக நடைபெறும் அதற்கென அரசு பல லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சுமார் 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகமும், ஊராட்சியும் சேர்ந்து செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக சொல்லுகிறார்கள் கிராம மக்கள்.

ஊராட்சி நிதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக நிதி ஆகியவற்றை இணைத்து இந்த பகுதியில் சாலைகளுக்கு மண்ணடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்சாலையே இல்லை இங்கு.
அது மட்டுமல்ல மூன்று லட்சம் ரூபாய் செலவில் மின்விளக்குகள் 150 போட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் 150 மின்கம்பங்கள் கூட இந்த கிராமங்களில் கிடையாது என்றும் சொல்லுகிறார்கள் அந்த கிராம மக்கள்.
இதுவரை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாகவும் ஊராட்சி மூலமாகவும் 14 மினிடேங்குகள் ரிப்பேர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது அதை அதிகாரிகள் நேரிலே வந்து செய்து பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள் கிராம மக்கள்.

இது தொடர்பாக கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை அவர்கள் சொல்லுகின்ற போது சாலைக்கு மண்ணடித்ததாக எட்டு லட்சம் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் ஆனால் தனி நபருக்கு மண்ணடித்தது தான் மிச்சம் என்றும் இந்த பகுதியில் மண்சாலையே இல்லை என்றும் கூறுகிறார்.
மேலும் கூவாகம் ஆதிதிராவிடர் நல குடியிருப்பில் வசிக்கும் அஜித் இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை முற்றிலுமாக பழுதாகி போய் உள்ளது. ஆனால் அதை சரி செய்யக்கோரி எவ்வளவோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார். இரவு நேரங்களில் வெளியே செல்வது அச்சமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

மேலும் அதிக பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி இந்தப் பகுதியில் குடிநீர் அதிக அளவு சுண்ணாம்பு மற்றும் உப்பு நீராகவே வருகிறது. இதனால் உடல் நல கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே வேறு பகுதியில் போர் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை வைக்கிறோம் யாரும் கண்டு கொள்வதே கிடையாது இந்த குடிநீரை குடிப்பதனால் உடல் நலக் கோளாறு ஏற்படுவது தான் மிச்சம தொடர்ந்து சிறுநீரக பிரச்சனை கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் என்கிறார்.

இந்த கிராமங்களைச் சுற்றியும் கைப்பந்துகள் அமைக்கப்பட்டு முழுவதுமாகவே பழுதான நிலையில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையிலேயே கைப்பம்புகளும் இருக்கின்றன. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மினி டேங்குகள் இயங்காமல் இருக்கிறது. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த மக்களின் கோரிக்கை.
இப்படி ஊராட்சி நிதியும் வட்டார வளர்ச்சி அலுவலக நிதியும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை தமிழக அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் கவனம் பெறும் ஊராட்சியில் இந்த நிலைமை என்றால் மற்ற ஊராட்சிகள் எப்படி இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.