வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண வாகன முகாம் இன்று புதுச்சேரியில் பாகூர் கொம்யூன் சேலியமேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரங்கனூர் கிராமத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் ந.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் லட்சிய பயண வாகன முகாமின் பங்கேற்பாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் கலந்துரையாடியதோடு இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதனை சிறப்பு விருந்தினர்கள், பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து அகன்ற திரையில் பார்வையிட்டனர்.
பிறகு துணை நிலை ஆளுநரும், முதலமைச்சரும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சிறந்த பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. லட்சிய பயண வாகனத்தில் திரையிடப்பட்ட குறும்படங்களை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் 2024-ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சட்டமன்றத் தலைவர் ஆர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் எஸ் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை உரத் தொழிற்சாலையின் துணை மேலாளர் ராமசுப்ரமணியம் தலைமையில் ட்ரோன் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து உரையாடினார். அப்போது “முன்பு கூரை வீட்டில் வசித்த தாங்கள் தற்போது கான்கிரீட் வீட்டில் மகிழ்ச்சியுடன் வசித்து வருவதாகவும் இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம்” என்றும் திட்டப் பயனாளியான குமுதினி ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.