மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் பார்வையிட்டு பின்னர் வீராணம் ஏரியும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலானது டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திர வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கடலூரில் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனையடுத்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கார்த்திகேயன் நகர் மற்றும் கடலூர் முதுநகர், நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகளையும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குடிகாடு ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி குல்.மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் அருண் தன்புராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமன், செயற்பொறி அலுவலர் காந்தஸ்தரூபன், உதவி பொறியாளர் கொளஞ்சிநாதன், ஆகியோருடன் இருந்தனர்.

நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் வாய்க்கால்கள் தூர்வார் நடவடிக்கை மேற்கொண்டதால் பெரிய பாதிப்பு இல்லாமல் மழை நீர் வடிந்து பாதிப்புகள் குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அதிக நாள் மழை சூழ்ந்தால் பயிர்கள் பாதிக்கப்படும். மாவட்ட காவல், வருவாய்துறை, ஆகிய அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் அவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மழை பாதிப்பு ஏற்பட்டால் அங்குள்ள பொதுமக்களை பாதுகாத்து அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஜூன் மாதம் வீசிய திடீர் சூறை காற்றால் 1500 ஏக்கர் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டது. அவை உடனடியாக கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டது. கொடுக்க மனம் உள்ளது, அதனால் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.