சென்னையில் திமுக இளைஞரணி மாநாடு அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
வரலாறு காணாத கனமழையை மிக்ஜம் புயலின் எதிரொளியாக அல்ல, இடியொளியாக சென்னையும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களும் எதிர்கொண்டன. 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான வகையில் திறக்காமல் ஒரே இரவில் அளவுக்கு அதிகமாக திறந்து விட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின் போது சென்னைக்கு உள்ளேயே வாகனங்கள் வர முடியாத நிலை இருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் சென்னையை கடந்த சில மணி நேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து சீரானது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் திமுகவினர் பணியாற்றிட வேண்டும் என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று சிறப்பாக பணியாற்றினார்கள்.

அதுபோல இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி தனது சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் கொட்டுகிற மழை நேரத்திலேயே வெள்ள நீரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பகல், இரவு பாராது செயல்பட்ட இந்த அவசர கால உதவி கேட்டு, வந்த மொத்த கோரிக்கைகள் 5689 ஆகும். இதில் கர்ப்பிணி பெண்கள், அவசர சிகிச்சை வேண்டியோர், மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்கள் உட்பட 4266 கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. மொத்த கோரிக்கைகளில் 24.9% அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டினாலும் மக்களின் துயர்துடைக்க அவர்கள் முன் வரவில்லை.
மிக்ஜம் புயலின் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினரும், அரசியல் மார்ச்சரியம் இன்றி அரசின் பணிகளை பாராட்டி இருப்பது, நம் உண்மையான உழைப்புக்கும், அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகை அல்ல. பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களை பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. திமுக அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. அரசியல் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் தொடருகிறது.

இந்த நிலையில் முந்தைய ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நிச்சயம் அமைந்திடும். அந்த களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட சேலத்தில் உதயநிதி தலைமையில் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் 2024 ஆம் தேதி நடக்க நடைபெறுகிறது. பேரிடரில் இருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து சேலத்தில் சந்திப்போம். களம் எதுவாயினும் கலங்காது நிற்போம். இளைஞர் அணி மாநாடு வெல்லட்டும். அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளம் ஆகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.