மாஸ் கேப்டன் : சிவாஜி இறுதி ஊர்வலத்தில் சிங்கமாய் சீறிய விஜயகாந்த்..!

3 Min Read
விஜயகாந்த்

தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த நவம்பர் மாதமே உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாள்களுக்கு முன் வீடு திரும்பினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நுரையீரல் அழற்சி காரணமாக விஜயகாந்த் இன்று காலை காலமானார் (Vijayakanth Passes Away) என மியாட் மருத்துவமனை அறிவித்தது. தொடர்ந்து, அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும், அவர் இன்று காலை 6.45 மணியளவில் காலமானார் என்றும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது அவரது மைத்துனர் சுதீஷ் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image
விஜயகாந்த்

விஜயகாந்த் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ரசிகர் மன்றத்தில் இருந்து களச் செயல்பாட்டை தொடங்கிய விஜயகாந்த் 2005ஆம் ஆண்டில் கட்சியை தொடங்கினார். அரசியல் வாழ்வின் வீழ்ச்சியும் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் தொடங்கியது எனலாம். ஆனால், அதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று, சங்கத்தின் கடன்களை மொத்தமாக அடைத்தவர் என்றும் அவரின் நிர்வாகத்திறமை ஒட்டுமொத்தமாக வெளிச்சத்திற்கு வந்தது எனவும் பலரும் நினைவுக்கூர்வார்கள். குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் வசூல் செய்து கடன்களை வட்டியோடு அடைத்தார் எனவும் கூறப்படுவதுண்டு. மேலும் பசி என்று வருபவர்களுக்கும், நிதி உதவி நாடி வருபவர்களுக்கு உதவிகளை வாரி வழங்கிய வள்ளல் என்று அவர் குறித்து பலரும் தெரிவிப்பதை பார்த்திருப்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

ளத்தில் மக்களோடு மக்களாக நிற்பதே விஜயகாந்தின் பலத்திற்கு காரணம் என்பார்கள். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், காவேரி விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்தது என களத்தில் நிற்பதையே தனது அரசியலுக்கான வித்தாக விதைத்தவர், விஜயகாந்த்.அந்த வகையில், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தபோது நடைபெற்ற அவரின் இறுதி ஊர்வலத்தில் களத்தில் இறங்கி அவர் செய்த செயல்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சென்னை தி.நகர் சௌத் பார்க் சாலையில் உள்ள சிவாஜி கணேசனின் இல்லத்தில் இருந்து அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டதால் சென்னையே அன்றைய தினம் ஸ்தம்பித்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அப்போது, மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் சிவாஜி கணேசனின் வீட்டின் முன் குவிந்தது. ஆங்காங்கே தள்ளுமுள்ளும் நடந்தது. இதில், சிவாஜி கணேசன் வீட்டருகே ஏற்பட்ட நெருக்கடியால் அவரது உடலை எடுத்துச்செல்லவும் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் களத்தில் இறங்கி, வேட்டிச்சட்டை துண்டுடன் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.விஜயகாந்தின் துணிச்சலும், களச்செயல்பாட்டையும் பறைசாற்றும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது எனலாம். மேலும், சிவாஜி கணேசனின் உடல் கொண்டுசெல்லப்பட்ட வாகனத்தில், ஐஸ் பெட்டியுடன் அவரது உடலை ஏற்ற விஜயகாந்த் உதவி செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது விஜயகாந்த் காலமான இன்று இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அவரது துணிச்சலையும், தைரியத்தையும் நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.

Share This Article
Leave a review