தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கு உரிய நிதி வழங்காவிட்டால் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு உரிய நிதி வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதையடுத்து நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரிபவன் முன்பு உதவி கமிஷனர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திட்டமிட்டப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 100 பெண்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே பதாகைகள் மற்றும் ஒன்றிய அரசு கட்டித்த பேனர்களுடன் ஒன்று கூடினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாஸ்திரி பவன் அருகே அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் போலீசாருக்கும் முற்றுகை போராட்டத்திற்கு வந்த கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் போலீசார் நிலைமை குறித்து விளக்கியதை தொடர்ந்து சற்று தொலைவிலேயே முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்றிய அரசு நிவாரண நிதியை முறையாக கொடுக்க மறுக்கிறது. உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தான் அதிகளவில் நிதி கொடுக்கிறார்கள். எனவே ஒன்றிய அரசின் இதுபோன்ற பாரபட்சமான போக்கை தமிழகத்திற்கு எதிரான மற்றும் தமிழகத்தை வஞ்சிக்கும் இந்த போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். எனவே தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனே கொடுக்கவேண்டும் என்று தான் நாங்கள் இந்த போராட்டத்தை எடுத்து இருக்கிறோம். ஒரு வேலை இதற்கும் பிறகும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்று சொன்னால் ‘அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி ஒரு மாபெரும் போராட்டம் மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும். புயல் வந்தாலும், வரவிட்டாலும், வெள்ளம் வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிதியை ஒதுக்கி தரவேண்டும் என்ற நிதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது 6 ஆயிரம் கோடி நிதி கொடுத்தார்கள் என்றால் அதில் தமிழ்நாடு அரசு 1300 கோடி நிதி செலவு செய்ய வேண்டும்.

அதில் ஒன்றிய அரசு கொடுத்து இருக்கிறது ரூ.400 கோடி. விதகள்ப்படி 10 சதவீதம் என்றால் அதில் ரூ.40 கோடி தான் எடுத்து நிவாரண பணிகளுக்கு கொடுக்க முடியும் தமிழக அரசு. மாநில அரசு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று சொல்வது, ஒன்றிய அரசு இந்த பிரச்னையை மிக தீவிரமாக கவனம் செலுத்தி நிதி வழங்க வேண்டும் என்பதற்கு தான். தற்போது நாங்கள் தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா அல்லது முடியாதா என்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்ல வில்லை. இது போல் தேசிய அளிவில் பெரிய பேரிடரா இல்லையா என்று ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டும். நிச்சயமாக திமுக உள்ளிட்ட மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் கலந்து பேசி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என கூறியுள்ளார்.