கடலூரில் மனைவியை ஆணவக் கொலை செய்த வழக்கில், கணவர், மாமியார், நாத்தனார் அவரின் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், அடுத்த மேல் புவனகிரியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் கடந்த 8.7.2014 அன்று புவனகிரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் பெருமாத்தூர் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் மற்றும் வாட்டர் கேன் வியாபாரம் செய்து வந்த தனது மகள் சீதாவை காணவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் விசாரணையில் சீதாவுக்கும் சிதம்பரத்தை சேர்ந்த அரச கிருஷ்ணன் மகன் சரவணன் வயது (36) என்பவருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் சரவணனை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15.7.2014 அன்று சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் கடந்த 16.7.2014 அன்று சரவணனின் அக்கா சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன்.

இவர் மேல்புவனகிரி கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் என்பவரிடம் ஆஜராகி, காணாமல் போன சீதாவை 16.6.2014 ஆம் தேதி என் மைத்துனர் சரவணன் ஒரு மப்பட்டில் தான் வாட்ச் மேனாக வேலை செய்யும் சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் உள்ள அட்சயா கார்டனுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் சீதாவை தனிகுடித்தனம் வைப்பதாக கூறி தன் வீட்டிலேயே தங்கவைத்து விட்டு, தானும் தன் மைத்துனர் சரவணன், மாமியார் செல்வி, மனைவி சகுந்தலா ஆகியோர் திட்டம் தீட்டி சீதாவை கொலை செய்து பிணத்தை எரித்து விட வேண்டும் என முடிவெடுத்தனர்.

கடந்த 17.6.2014 ஆம் தேதி சீதா வீட்டினுள் படுத்திருந்த போது, இவளை உயிருடன் விட்டால் குடும்பத்துக்கே அவமானம் என்று கருதி, என் மனைவியையும், என் மாமியாரையும் வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு நானும், சரவணனும் வீட்டினுள் போய் சரவணன் சீதாவின் கழுத்தை பிடித்து நெறித்தார்.
அப்போது நான் கட்டையால் சீதாவின் தலையில் அடித்தேன். அதில் சீதா இறந்துவிட்டார். இதன்பின்னர் டீசலும், சர்க்கரையும் வாங்கி வந்து கார்டனுக்குள்ளேயே உள்ள பள்ளத்திற்கு அருகில் எடுத்து சென்று சீதாவின் பிணத்தை எரித்தோம்.

பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் தப்பித்து கொள்ளுங்கள் என்று சரவணன் சொன்னதார். நானும் என் மனைவி, என் மாமியார் 3 பேரும் அங்கிருந்து வந்து விட்டோம் என்று கூறினார். அதன் பேரில் வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சரவணன், வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகியோர் மீது கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சீதாவின் தந்தை பஞ்சநாதன், தாய் காந்திமதி ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில் தங்களது மகள் சீதா ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்.

பின்பு சரவணனும், அவரது தாய் செல்வி, அவரது அக்கா சகுந்தலாவும், மாமா வெங்கடேசன் என்பவரும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை குடும்பத்தில் வைத்து கொண்டால் அவமானம் என கருதி கொலை செய்து, எரித்தும் உள்ளார்கள் என கூறினர்.
அப்போது சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, இன்று இந்த வழக்கில் நீதிபதி உத்தமராஜ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சரவணன், வெங்கடேசன், செல்வி, சகுந்தலா, ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

மேலும் சரவணன், வெங்கடேசன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், செல்வி, சகுந்தலா ஆகியோருக்கு தலா ரூ. 20,000 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜராகி வாதாடினார்.