தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவரும், பிரபல நடிகரும், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் ஆகியோர் முன்பு செல்ல உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரண்டு பேரும் ஊர்வலத்தின் போது கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வந்தனர். இது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. சுமார் 3 மணி நேரம் ஊர்வலத்திற்கு பிறகு விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள், தேமுதிக கட்சி தொண்டர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், நடிகர்கள்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கூட்டம் அலை மோதியதால் விஜயகாந்த் உடல் நேற்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நேற்று அதிகாலை தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் நேற்று அதிகாலை 5.14 மணியளவில் வாகனம் மூலம் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. விஜயகாந்த் உடல் இருந்த வாகனம் பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது. பொதுமக்கள் வழிநெடுகிலும் இருபுறமும் நின்று விஜயகாந்த் உடலுக்கு அதிகாலையிலும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீவுத்திடலில் மேடை அமைக்கப்பட்டு அதில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு மாலை 6 மணி அளவில் வந்தடைந்தது. அங்கு விஜயகாந்த் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பின்னர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது. மேலும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 24 போலீசார் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குடும்ப முறைப்படி தமிழில் மந்திரங்கள் முழங்க விஜயகாந்துக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு விஜயகாந்த் உடல் இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் விஜயகாந்தின் உடல் அடக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் 8 எல்.இ.டி.திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் வழியாக விஜயகாந்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை தொண்டர்கள், பொதுமக்கள் பார்த்தனர். விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட ‘சந்தனப்பேழையில் புரட்சிக் கலைஞர் கேப்டன்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தேமுதிக அலுவலகத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கேப்டன்… கேப்டன் என்று கோஷம் எழுப்பி கண்ணீர் விட்டு அழுதனர். விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் ‘புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் நிறுவனத் தலைவர், தேமுதிக என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. விஜயகாந்த்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் அந்த பேழையில் இடம் பெற்றிருந்தன.