Low Budget Movies (குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள்) குறைந்த பட்ஜெட்டில் சமூக நோக்குடன் வெளியான தரமான படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பட்ஜெட்டைவிடவும் கதையை அதிகம் நம்பிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் காலப்போக்கில் பெரிய ஹீரோவை வைத்து அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தால் போதும் வசூலை குவித்துவிட்டு சேஃப்டி ஸோனுக்குள் சென்று விடலாம் என்ற எண்ணவோட்டம் அதிகரித்தது. அப்படி பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படங்கள் உருவாகியது தமிழ் சினிமாவில் அதிகரித்தது.

இப்படி கடந்த சில வருடங்களாக குறைந்த பட்ஜெட்டில் படங்கள் உருவாவது அதிகரித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாவது மட்டுமின்றி அந்தப் படங்கள் சிறந்த கதைகளோடு தயாராவது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதேசமயம் அப்படி உருவாகும் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் மட்டும் சிக்கல்கள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன.
பிரமாண்ட படம் என்ற லேபிளோடு வெளியான படங்கள் அண்மைக்காலமாக சுமாராகவே ஓடின. போட்ட பட்ஜெட்டை விட வசூலை அந்த வகையான படங்கள் வாரிக்குவித்தாலும் கதை ரீதியாகவும், காட்சியமைப்பு ரீதியாகவும் ரசிகர்களை திருப்திப்படுத்த அந்தப் படங்கள் தவறிவிடுவதாகவும் ரசிகர்கள் மத்தியில் பலமான கருத்து எழுந்திருக்கின்றன. 2.0, வாரிசு, பீஸ்ட், அண்ணாத்த போன்ற படங்கள் பெரிய படங்கள் என்ற லேபிளோடு வந்தவைதான். ஆனால் அவைகளின் ரிசல்ட் அனைவரும் அறிந்ததே.
ஆனால் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் ரசிகர்களை அதிகமாகவே திருப்திப்படுத்துகின்றன. இருப்பினும் திரையரங்குகள் கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல்களால் அதுபோன்ற படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயங்குகிறர்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கின்றன.எனவே அந்த மாதிரியான படங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தல்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில் 2015 முதல் 2022ஆம் ஆண்டு வரை குறைந்த பட்ஜெட்டில் சமூக நோக்கத்துடன் வெளியான தரமான படங்களுக்கு மானியம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் கொள்கை விளக்க குறிப்பில், சமூகப் பொறுப்பும், சமுதாய விழிப்புணர்ச்சியுமாக திரைப்படங்களைத் தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியிடுவோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.
தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் வாயிலாக, குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இத்திட்டத்தின் வாயிலாக ரூ.7 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. 2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.