மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள்ள கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில அரசு கூடுதல் பாதுகாப்புடன் இன்றைய தேர்தல் வாக்குப்பதிவை நடத்தி வருகின்றனர் .
நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் , புதுச்சேரி உட்பட மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது .

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி – குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு நடைபெற்று வந்தநிலையில், மொய்ராங் சட்டமன்ற தொகுதியில் தமன்போக்பி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் புகுந்த மர்மநபர்கள் வாக்குசாவடியில் துப்பாக்கிசூடு நடத்தினர். திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் வாக்காளர்கள் அங்கும் இங்கும் பதறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இப்படியான கலவரங்களுக்கு பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் இன்றைய தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.