சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி வேலுமணியும் மனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது சபாநாயகருக்கு நீதிமன்ற உத்தரவிட முடியுமா என்று விளக்கம் அளிக்கும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சங்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வேலுமணி தரப்பில் அரசியல் சட்ட பிரிவுகளை மேற்கோள் காட்டி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க எந்த தடையும் இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், உயர்நீதிமன்றம் அனுப்பும் நோட்டீஸ் அவரை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் இவிதான் செயலி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். பல மாநில சட்டமன்றங்கள் இதை அமல்படுத்தியுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் போது நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியினர் பேசும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் இது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதனை அடுத்து தலைமை நீதிபதி நேரடி ஒளிபரப்பு என்பது சூழலைப் பொறுத்து சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது சட்டப்படி கட்டாயம் இல்லை என்று தெரிவித்து எதிர்க்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதை நிரூபிப்பது குறித்து வேலுமணி தரப்பு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார். இது குறித்து விளக்கம் அளிக்க அவர் அவகாசம் கோரியதை எடுத்து விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.