கப்பல் போக்குவரத்து துவக்கம்
இந்தியா இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து துவங்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பின் துவங்கப்பட்ட நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, இலங்கைபிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை,மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நேற்று கப்பலில் 50 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல் மாலை நாகை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் ஆர்வமுடன் வந்திரங்கிய 30 இலங்கை பயணிகளுக்கு நாகை துறைமுக அலுவலர்கள், இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர்.
பயனிகள் குறைவு
இந்த நிலையில் இன்று நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் கப்பலில் செல்ல 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதால் இன்று பயணிகள் கப்பல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என தெரிய வருகிறது. பயணிகள் கப்பலில் சோதனை ஓட்டம் கடந்த எட்டாம் தேதி முடிந்த நிலையில் பத்தாம் தேதி பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது மீண்டும் 12-ம் தேதி ரத்து செய்யப்பட்டு 14ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு நேற்று இந்தியா இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கு சென்று மீண்டும் நாகை துறைமுகம் வந்தடைந்த நிலையில்,

ரத்து
இன்று செல்ல வேண்டிய பயணிகள் கப்பல் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற கப்பல் போக்குவரத்து தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம் மக்களின் கோரிக்கையான கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் தெரிவித்துள்ளதாகவும் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் எ வ வேலு தெரிவித்திருந்த நிலையில் இன்று செல்ல வேண்டிய பயணிகள் கப்பல் ரத்து செய்யப்பட்டுள்ளது.மீண்டும் இனி திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் இயங்கும்.