கடலூர் மாவட்டம், அடுத்த வடலூரில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், அடுத்த பண்ருட்டியை சேர்ந்தவர் சண்முகம் வயது (55). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் முகமது ஜிகிரியா மகன் சதாம் உசேன் வயது (35) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது சதாம் உசேனுக்கு அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 16.1.2016-ல் சண்முகம் பணத்தை, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பணம் வசூல் செய்து விட்டு, வடலூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். இதை அறிந்த சதாம் உசேன் தனது நண்பர்களான கல்லுக்குழியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினோத்குமார் வயது (27), அஜித் வயது (28), ஆகியோருடன் அங்கு சென்று சண்முகத்திடம் அந்த பணத்தை கேட்டுள்ளார்.
அதை அவர் தர மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து சண்முகத்தை தாக்கி கொலை செய்து விட்டு ரூபாய் 4 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சதாம் உசேனுக்கு 8000 ரூபாய் அபராதமும், வினோத்குமார் மற்றும் அஜித்துக்கு தலா 7000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.