கும்பகோணம் வலங்கைமான் சாலையில் உள்ள திப்பிராஜபுரம் கிராமம் மேட்டுத்தெருவில் வசிப்பவர்கள் விவசாயி ரவிச்சந்திரன் (52) மகாலட்சுமி (45) தம்பதியினர் இவர்களுக்கு ரம்யா, சூர்யா, ரூபியா, சாரதி மற்றும் தனலட்சுமி என ஐந்து மகள்கள் உள்ளனர்.
இவர்களில், ரம்யா மற்றும் சூர்யா ஆகிய இரு மகள்களுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது, 3 மகளுக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால், விவசாயத்தில் போதுமான அளவிற்கு சமீப காலமாக லாபம் கிடைக்காத நிலையில், குடும்ப தேவைக்காக, ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு, மகாலட்சுமி, வீட்டு பணிப்பெண் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றார்,
அவர், குவைத் சென்றதில் இருந்தே, மனதளவில், பாதிக்கப்பட்ட கணவர் ரவிச்சந்திரன், அவ்அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் , இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது, அவரை கும்பகோணம் பக்தபுரித் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர் இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் .

இது குறித்து உடனடியாக, குவைத் நாட்டில் உள்ள அவரது மனைவி மகாலட்சுமிக்கு தகவல் அளிக்கப்பட்டது, இது குறித்து அவர் தனது உரிமையாளரிடம் தகவல் கூறி, தன்னை இந்தியா அனுப்பிட வேண்டினார், ஆனால், ஒப்பந்த காலம் 2 ஆண்டுகளில் ஒன்னரை ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால், இப்போது இந்தியா திரும்பி அனுப்ப முடியாது என மறுத்துவிட்டதாக தெரிகிறது, இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, இது குறித்து மத்திய அரசும், தமிழக அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இந்தியாவில் உயிரிழந்த தனது கணவரின் முகத்தை கடைசி முறையாக நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளார், இது காண்போர் அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது
இதனை தொடர்ந்து, ரவிச்சந்திரன் மகாலட்சுமி குடும்பத்தினர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்அப்வை நேரில் சந்தித்து குவைத் நாட்டில் உள்ள மகாலட்சுமியை இந்தியா திரும்ப உதவிட வேண்டும் என்றும், அதுவரை உயிரிழந்த ரவிச்சந்திரனின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கணவன் உயிரிழக்கும் போது அருகில் தான் இருக்க முடியவில்லை என்றாலும், உயிரிழந்த பிறகு, அவரது முகத்தை கூட நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்ற தவிப்பில் மகாலட்சுமி பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் குவைத்தில் சிக்கி இருப்பது கனத்தை இதயம் கொண்டவரையும் கரை செய்யும் என்றால் அதுமிகையல்ல .