கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மனோகரன் என்பரின் மனைவி ரேணுகா (40) என்பவரை மர்மநபர் அறிவாளால் தலை மற்றும் முகத்தில் வெட்டி கொலை செய்து விட்டு 3 சவரன் நகையை திருடி சென்றுள்ள சம்பவம்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் மனோகரன். இவரது மனைவி ரேணுகா (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ரேணுகா அருகே உள்ள டி.கே.எல் நெட்ஸ் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் மனோகரன் மகா சிந்தானிட்ஸ் என்ற பெயரில் ஸ்வெட்டர் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு மனோகரன் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் கோவை காந்திபுரத்துக்கு சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை அடையாளம் தெரியாத நபர் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் வீட்டுக்குள் வந்து அறிவாளால் தலை மற்றும் முகத்தில் வெட்டி கொலை செய்து விட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.

அவரது கணவர் மற்றும் மகள்கள் திரும்பி வந்து பார்த்த போது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் ரேணுகா இறந்து கிடந்துள்ளார். இதை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ஆகியோர் ரேணுகாவின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

ரேணுகாவின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு பதிந்திருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை வைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து அவரது உறவினர்கள் ரேணுகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.