கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களையும், வீட்டு வளர்ப்பு விலங்குகளையும் வேட்டையாடி செல்வது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் சுற்றுவட்டார பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று ஆடு, மாடுகளை கொன்று அப்பகுதியில் உலா வந்ததாக செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

இன்று காலை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்பில் உள்ள இரண்டு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆடுகள் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை தாக்கி தான் உயிரிழந்ததா? என வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மேலும் தெரு நாய்கள், செந்நாய்கள் போன்ற மர்ம விலங்கு தாக்கி இருக்கலாம் என தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதிக்கு வரும் மர்ம விலங்கு பற்றி கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து ஆடுகள் இறந்த இடத்தில் அருகே உள்ள மற்றொரு ஆடுகள் வளர்க்கும் கொட்டகை என இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு,

தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் இரவில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒளிவீசும், அந்தப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக ஒளிவீசி புகைப்படங்கள் எடுக்கும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.