கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே வீரமாமுனிவர் எனப்படும் இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி எனும் பாதிரியார் தமிழ்நாட்டிற்கு வந்து கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பத்தில் தங்கி, புனித பெரியநாயகி மாதா திருத்தலம் எனும் கிறித்துவ தேவாலயத்தை கட்டினார். இந்த திருத்தலம் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் முக்கியமானதாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

கோணாங்குப்பம் பெரியநாயகி மாதா கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரிய நாயகி மாதா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 10 நாட்களாக சிறப்பு திருப்பலி, ஆராதனை, தேர்பவனி நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மேனாள் ஆயர் கோட்டாறு மறை மாவட்டம் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் தேர் பவனி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருத்தல அதிபர் தேவசகாயராஜ், இணை பங்குதந்தை லூர்து ஜெரார்ட், ஆன்ம குருஜோசப் ரொசாரியோ ஆகியோர் முன்னிலையில் முகாசப்பரூரிலிருந்து மாதாவுக்கு சீர்வரிசையுடன் வந்த ஜமீன் ரமேஷ் கச்சிராயர் தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அதில் மாவட்ட கவுன்சிலர் மனோன்மணிய கோவிந்தசாமி, தி.மு.க வடக்கு ஒன்றிய பொருளாளர் ஆர்.ஜி. சாமி, பரூர் ஒன்றிய கவுன்சிலர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மோகன் மற்றும் மறைவட்ட குருக்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை காரியஸ்தர்கள், வீரமாமுனிவர் கழக செபக் குழு, மரியாளின் சேவை, வின் சென்ட்தே பால் இளைஞர்கள், சிறார்கள் மற்றும் கோணாங்குப்பம் பங்கு மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விருத்தாசலம் சுற்றுவட்டார கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கோணாங்குப்பம் பெரியநாயகி மாதா கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கிய ராஜ், திட்டக்குடி டி.எஸ். பி. மோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.