கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான நிலையில், அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப ரீதியில் எடுக்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

இந்த பங்களாவில் கடந்த, 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் தொடர்ந்து அனுப்பிய நிலையில், இன்று காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு ஆஜரான சயானிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது தகவல் தொழில்நுட்ப குழுவினர் நடத்திய ஆய்வுகளில், கொலை மற்றும் கொள்ளை நடந்த சமயங்களில் சயானின் செல்போன் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. அவர் யாருடன் பேசினார். அவர்களுக்கும் சயானுக்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிற்பகல் 2:30 மணிக்கு ஆஜரான சயானிடம் இரவு 10 மணி வரை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை சிபிசிஐடி அதிகாரிகள் கொடுக்க மறுத்து விட்டனர்.