புதுச்சேரியில் சிறுமி உயிரிழப்பிற்கு நீதிக்கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் பந்த் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல், அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது வாலிபர் மற்றும் விவேகானந்தன் வயது (57) என்ற முதியவரும் கூட்டு சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது உயிரிழந்தார்.

இதனிடையே நேற்று சிறுமியின் உடல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். இன்று சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடந்து வருகிறது.
குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டியும், சிறுமி உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகக்கோரியும், சிறுமி உயிரிழப்பிற்கு காரணமாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுபடுத்தக்கோரியும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பந்த் போராட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே பேருந்துகள் இயங்காததால் கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் கல்லூரி பேருந்துகளில் பயணிகளை போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.

அப்போது மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.